"மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவுக்கு வணக்கங்கள்!!
நீங்கள் தமிழறிஞர், சிறந்த பட்டிமன்ற நடுவர். எமது இனிய தமிழ் இலக்கியங்களை, தமிழக மக்களின் நெஞ்சங்களிலே கொண்டு சேர்ந்திட அயராது பாடுபட்டவர், மூத்த தமிழறிஞர் என்ற வகையில், இன்றைக்கு (26/1/2026) மதுரை விக்டோரியா மன்றத்தில் உங்களது பட்டிமன்றத்தை கேட்க வந்தோம்.
ஆனால் உங்களின் திருப்பரங்குன்றம் தீபத்தூண் குறித்த விஷமத்தனமான பேச்சு உலகத்தில் வாழ்கின்ற அனைத்து முருக பக்தர்களின் மனதை புண்படுத்தி விட்டது.
குறிப்பாக மதுரை மக்களின் மனதை காயப்படுத்தி விட்டது. நீதிமன்றத்தை அவமதித்து விட்டீர்கள். நீதிமன்றம் நீதி அரசர்கள் கொடுத்த தீர்ப்பை கொச்சைப்படுத்தி விட்டீர்கள்.
ஏனென்றால் இன்றைக்கு நீங்கள் நடுவராக
பேசும்போது திருப்பரங்குன்றம் தீபம் பற்றி நீங்கள் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் திருப்பரங்குன்றம் தீபம் காலம் காலமாக ஓரிடத்தில் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குப் பதில் மலை உச்சியில் ஏற்ற வேண்டும் என்று சொன்னால், அதற்கு யார் வந்து சொல்ல வேண்டும் என்று கேட்டீர்கள்?
கடவுள் முருகன் வந்துதான் சொல்ல வேண்டும் என்ற உங்களின் தரம்தாழ்ந்த கருத்தை நாங்கள் மிக வன்மையாக கண்டிக்கிறோம்.
இதுநாள் வரை உங்கள் மீது நாங்கள் வைத்திருந்த மதிப்பையும், மரியாதையும் இழந்து விட்டீர்கள். நீங்களே உங்கள் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்டீர்கள். நீங்கள் சொல்வதைப்போல முருகனே வந்து மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம்.
பாண்டிய மன்னனிடம் நீதி கேட்ட கண்ணகி போல், ரவிகுமார் தற்போது நீதிமன்றத்தில் நீதி கேட்டு நின்றதால் , என் அப்பன் சுவாமிநாதனால் வழங்கப்பட்ட தீர்ப்பாக நாங்கள் கருதுகிறோம்.
உமது குதர்க்கமான பேச்சு நிலை நிறுத்தப்பட்டால், நீதித்துறை எதற்கு? காவல்துறை எதற்கு? அரசு எதற்கு? தொல்லியல் துறை எதற்கு? இவை எதுவுமே தேவை இல்லையே.
உங்கள் கூற்றுப்படி இது சரி என்றால் எதற்காக நீங்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த மலை முருகனுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.
மலைக்கு சொந்தக்காரன் முருகன். அந்த முருகன் கோவிலில் இருக்கக்கூடிய அர்ச்சகர்கள் அவனுடைய பணியாட்கள். அவனை வழிபடக்கூடியவர்கள் அவனது பக்தர்கள்.
முருகனுக்கு சொந்தமான மலை என்று தீர்ப்பு வழங்கிய பின்னர் அதை மலை உச்சியில் ஏற்றினால் என்ன? அதில் உமக்கு என்னய்யா வருத்தம் இருக்கிறது? உமது விஷமத்தனமான பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது . மூன்று நீதிபதிகள் கொண்ட தீர்ப்பை நீங்கள் ஏளனம் செய்திருக்கிறீர்கள்?
இன்று முதல் மதுரை மக்கள், தமிழக மக்கள் முருகன் மீது பற்று கொண்ட யாவரும் உங்கள் பேச்சை கேட்க மாட்டார்கள். நாங்கள் உங்களை வன்மையாக கண்டிக்கின்றோம்.
நீதி அரசர்கள், நீதித்துறை தாமாக முன்வந்து பாப்பையாவின் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது பேச்சுக்கு நீதித்துறை கண்டனம் தெரிவிக்க வேண்டும்."
– .மதுரை முருக பக்தர்கள் சபை
0 Comments